சென்னை, சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் சாலை வரியை ஐந்து சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்த போவதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு, தமிழக மக்களின் தலையில் தொடர்ந்து இதுபோன்ற சுமைகளை இறக்கி கொண்டே இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறைகளான வணிக வரி, பதிவுத் துறை, டாஸ்மாக் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக போக்குவரத்து துறையும் கணிசமான பங்கை வகிக்கிறது. தமிழகம் முழுவதும் விற்பனையாகும் வாகனங்களில் குறிப்பிட்ட சதவீதம் சாலை வரியாக மாநில அரசு வசூலிக்கிறது.
இந்த வரியுடன் சேர்த்து தான் ஒரு வாகனத்தின் ஆன்-ரோடு விலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சாலை வரியாக ரூ.5,873 கோடி வருமானமாக தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.
எனவே, இதுபோன்று சாலை வரியை உயர்த்துவதால் கார், பைக், ஆட்டோ போன்ற அனைத்து விதமான வாகனங்களின் விலைகளும் கிடு கிடுவென உயரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.
சாலை வரியை ஏற்கனவே திரு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான் உயர்த்தியது. அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு இரு சக்கர வாகனங்களுக்கும், 2010-ம் ஆண்டு நான்கு சக்கர வாகனங்களுக்கும் சாலை வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாலை வரி உயர்த்தப்படவே இல்லை. தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய திமுக ஆட்சியில் மீண்டும் சாலை வரியை உயர்த்த முடிவு எடுத்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு, ரூ 10 லட்சம் வரை மதிப்பிலான நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 சதவீதமும் அதற்கு மேல் இருந்தால் 15 சதவீதமும் சாலை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வரி சதவீதத்தை உயர்த்த தற்போது தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. திமுக தலைமையிலான அரசின் இந்த புதிய வரி உயர்வுக்குப் பிறகு தமிழகத்தில் சாலை வரிகள் இருசக்கர வாகனங்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது இரு சக்கர வாகனத்தின் விலை ரூ1 லட்சம் வரை இருந்தால் அதற்கு 10 சதவீதமும், ரூ1 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், சாலை வரியாக வசூலிக்கப்படலாம் என தெரிய வருகிறது. அதே போல நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மதிப்பிலான வாகனங்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வாகனங்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 15 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு அதிக மதிப்பிலான வாகனங்களுக்கு 20 சதவீதமும் சாலை வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கார், பைக், ஆட்டோ போன்ற அனைத்து விதமான வாகனங்களின் விலை தாறுமாறாக உயர வாய்புள்ளது. திமுக தலைமையிலான அரசின் இந்த புதிய வரி விதிப்பின் மூலம் 100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், 125 சி.சி. திறன் கொண்ட பைக்குகள் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.95 ஆயிரம் வரையிலும் விலை உயரக்கூடும் எனவும், 150 சி.சி. மற்றும் அதற்கும் மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விலை இப்போதைய விலையை விட ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை உள்ள கார்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. எனவே 2 முதல் 3 சதவீதம் வரை வரி அதிகரிக்கும் போது அதன்விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயரக்கூடும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், சொத்துவரி உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலையேற்றம், வரலாறு காணாத வகையில் மின் கட்டண உயர்வு, நெடுஞ்சாலைகளில் பயணிக்க அதிகளவிலான சுங்க கட்டணம் போன்ற காரணங்களால் தமிழக மக்களை கசக்கி பிழிந்து வரும் சூழலில், தற்போது சாலை வரியையும் உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம். பொதுமக்களுக்கு பெரும் சுமையாகிவிடும். இதனால் ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் சீரழிந்துவிடும். தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கும் திமுக தலைமையிலான அரசு இனியாவது சுயநலப்போக்கோடு செயல்படுவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய சாமானிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலை வரியை உயர்த்தும் முடிவை உடனே கைவிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
NEWS EDITOR : RP