அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுனர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சரக்கு லாரிகள் ரெகுலராக செல்கின்றன. அவ்வாறு செல்லும் போது பல்வேறு தட்ப வெப்பநிலையை ஓட்டுனர்கள் எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் உடல் வெகு சீக்கிரமே சோர்வு அடையலாம். இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
எனவே பேருந்துகளை போல் லாரிகளிலும் ஏசி வசதி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிக செலவு உள்ளிட்ட விவகாரங்கள் இதற்கு தடையாக இருந்து வந்தது.
இந்நிலையில் அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் 2025 ஆண்டு முதல் கட்டாயமாக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே வோல்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற உலகளாவிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உயர்தர டிரக்குகள் குளிரூட்டப்பட்ட கேபின்களுடன் வந்துள்ளன. அயல்நாடுகளில் பெரும்பாலான லாரி கேபின்களில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP