திருவண்ணாமலை ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மோசடி திருவண்ணாமலையை சேர்ந்தவர் குபேந்திரன். இவர் ஆன்லைன் மூலமாக கடன் தொகை பெற முயற்சித்து உள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. எண்ணையும் மோசடி நபரிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்து 521-ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளனர். இதுகுறித்து குபேந்திரன் திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அதேபோல் வந்தவாசி கோதண்டம் கிராமத்தை சேர்ந்த இமயவரம்பன் என்பவருக்கு ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் பின்னர் இருமடங்காக பணம் கிடைக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதனை நம்பிய அவர் ரூ.21 ஆயிரத்தை ஆன்லைனில் முதலீடு செய்து உள்ளார்.
பின்னர் மோசடி நபர் மீண்டும், மீண்டும் பணத்தை செலுத்துமாறு அவரிடம் கூறியுள்ளார். மோசடி நடப்பதாக சுதாரித்து கொண்ட இமயவர்மன் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஒப்படைப்பு இந்த 2 சம்பவங்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து குபேந்திரன் மற்றும் இமயவர்மன் ஆகியோர் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். இந்த நிலையில் இன்று சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்கப்பட்ட குபேந்திரன் மற்றும் இமயவர்மன் ஆகியோர் இழந்த ரூ.95 ஆயிரத்து 521-ஐ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
NEWS EDITOR : RP