கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம்
போன்ற ஆசை வார்த்தைகளால் 11 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரால் வடமாநில நபர் பிடிபட்டார். குற்றவாளி சிக்கியது எப்படி? என பார்க்கலாம்.
நவீன காலத்தின் வளர்ச்சியில் எல்லாமே இன்ஸ்டண்ட் ஆக கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இன்ஸ்டண்ட் மேகி, இன்ஸ்டண்ட் காஃபி போல முதலீடு செய்யும் பணத்தின் லாபமும், இன்ஸ்டண்ட் ஆக பெற வேண்டும் என்ற மக்களின் பேராசையே மோசடி கும்பலின் மூலதனம். அந்த பேராசையை தூண்டிவிடும் வகையில் சமீப நாட்களாக மோசடி கும்பல் ஆயுதமாக பயன்படுத்தி வருவது கிரிப்டோ கரன்சி முதலீட்டைத்தான்.
பொதுமக்களை ரேண்டமாக தேர்வு செய்யும் மோசடி கும்பல், அவர்களை செல்போன் அழைப்பு மூலமோ, வாட்ஸ்-ஆப், டெலிகிராம் போன்ற இணையவழி சேவைகள் மூலமோ தொடர்பு கொள்கின்றனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் அந்த பணத்தில் இருந்து குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளையும் மோசடி கும்பல் மக்கள் மனதில் விதைக்கின்றனர்.
அதிக பணம் கிடைக்கப் போகிறது என்ற எண்ணத்தால், அவர்கள் கூறும்படி அடுத்தடுத்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் பொதுமக்கள். ஆனால் பணம் கைமாறிய பின்னரே, லாபம் ஏதும் கிட்டாமல் முதலீடும் போய் தாங்கள் மோசடிக்குள்ளானதை அவர்களால் உணர முடிகிறது. அப்படிப்பட்ட ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி மோசடி கும்பலிடம் 11 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்.
வேப்பேரி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞர் புகார் ஒன்றையும் அளித்தார். புகாரில் செல்போன் மூலம் தன்னை தொடர்புகொண்ட ஒரு நபர் கிரிப்டோ கரன்சி முதலீடு பற்றி பேசியதாக தெரிவித்துள்ளார். பற்பல ஆசை வார்த்தைகளைக் கூறி குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என தன்னை அந்த நபர் தன்வசப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து வேண்டிய விவரங்களை பதிவு செய்ததாகவும், கொடுத்த வங்கிக் கணக்கில் சுமார் 11 லட்சம் ரூபாய்க்கு மேல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய அனுப்பி ஏமார்ந்துவிட்டதாகவும் இளைஞர் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி நபர் தொடர்புகொண்ட செல்போன் எண் மற்றும் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்றனர்.
பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை கண்டறிந்து, அதன் சிக்னலையும் போலீசார் டிராக் செய்யத் தொடங்கினர். அத்துடன் அந்த வங்கிக் கணக்கில் இருந்து எந்த ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் ஆய்வு செய்தபோது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் இருந்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூரத் விரைந்த தனிப்படை போலீசார், அங்குள்ள ஏடிஎம் மையத்தின் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி மோசடி நபரின் அடையாளத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு முகாமிட்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின்னர், ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்துச் சென்ற தனிவாலா மெஹபூப் இப்ராஹிம் என்ற நபரை கண்டுபிடித்து ஜூன் 14-ம் தேதி அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து செல்போன், மோசடிக்கு பயன்படுத்திய சிம்-கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளியான தனிவாலா மெஹபூப் இப்ராஹிமை குஜராத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அங்கு அவருக்கு டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வந்தனர். இன்னும் எத்தனை பேரிடம் இவர் இதே பாணியில் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து தனிவாலா மெஹபூப் இப்ராஹிமிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். அத்துடன் சைபர் மோசடிகள் தொடர்பான எந்தவித உதவிகளுக்கும், புகாருக்கும் 1930 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் எனவும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
NEWS EDITOR : RP