சென்னை, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய நடிகர் விஜய், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டாம் என்று கூற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ஷபுல் ஹசீனா என்ற மாணவி நடிகர் விஜய்யிடம் சான்றிதழ் பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அந்த மாணவி பேசுகையில், “நடிகர் விஜய்யை உண்மையான அண்ணனாக பார்க்கிறேன். அவரது திரைப்படங்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும், வெற்றிகரமாக பல கோடிகள் சம்பாதித்துவிடும்.
ஒரு வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மிக ஆழமாக மனதில் பதியும் வகையில் அவரது படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த வருடம் நான் செலுத்தப்போகும் வாக்கிற்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு விஜய் அண்ணா வரவேண்டும் என்பது எனது ஆசை. அவர் சினிமா மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கில்லியாக இருக்க வேண்டும். ‘எல்லா புகழும் ஒருவனுக்கே’ என்ற பாடலில் சொன்னதை மனதில் ஏற்றிக்கொண்டதால் இன்று இந்த பரிசை பெற்றிருக்கிறேன். அதே போல் நான் செலுத்தப்போகும் வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக நீங்கள் வரவேண்டும்” என்று அந்த மாணவி நடிகர் விஜய்யிடம் கேட்டுக் கொண்டார்.
NEWS EDITOR : RP