வேலூர் ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது கும்பல் கொட்டாய் கிராமம். இந்த கிராமம் மலை மற்றும் காடுகளை ஒட்டி இருப்பதால் அவ்வப்போது தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் கும்பல் கொட்டாய் கிராமம் அருகே உள்ள பரவமலை காப்புக்காடு பகுதியில் இருந்து 6 வயது ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி விவசாய நிலம் அருகே வந்துள்ளது.
இதனை பார்த்த நாய்கள் மானை துரத்தி கடித்துள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் நாய்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது ரத்த காயங்களுடன் புள்ளிமான் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து வரத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வருவதற்குள் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனவர் ஜனார்த்தனன், வன காப்பாளர் சங்கீதா ஆகியோர் இறந்த மானை மீட்டு ஒடுகத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மானைபிரேதப் பரிசோதனை செய்த பின்னர் வனத்துறையினர் அதனை தீயிட்டு எரித்தனர்.
NEWS EDITOR : RP