பைபர்ஜாய் புயலை முன்னிட்டு நிவாரண பணிகளுக்கு ராணுவம், கடற்படை உள்ளிட்ட ஆயுத படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி, அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்-பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோர பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருதஞ்சய் மொகபத்ரா இன்று கூறும்போது, பைபர்ஜாய் புயல் ஆனது, ஜக்காவ் துறைமுகத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் சவுராஷ்ரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. அது அரபிக்கடலின் வடகிழக்கே மையம் கொண்டு உள்ளது.
இதனால், மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தில் மத்திய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் மணீஷ் இன்று கூறும்போது, இயற்கை பேரிடரை எதிர்கொள்வதற்காக ராணுவம், கடற்படை, விமான படை மற்றும் இந்திய கடலோர காவல் படை என அனைத்து ஆயுத படைகளும், உள்ளூர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயார் நிலையில் உள்ளன என கூறியுள்ளார்.
குஜராத்தின் பூஜ், ஜாம்நகர், காந்திதம் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் மாண்ட்வி மற்றும் துவாரகா ஆகிய பகுதிகளிலும் 27-க்கும் கூடுதலான நிவாரண படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. ராணுவ அதிகாரிகள், நகர நிர்வாகத்தினருடனும் மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்டோருடனும் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மத்திய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP