பிரபல திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்தது குறித்து அவர் பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை வினோதினி, 2011 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தனது வித்தியாசமான குரல் மற்றும் நடிப்பு என ரசிகர்களை கவர்ந்த அவர் தொடர்ந்து கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, பிசாசு, ஓ காதல் கண்மணி, பசங்க 2, அரண்மனை 2, அழகு குட்டிச் செல்லம், அப்பா, ஆண்டவன் கட்டளை, ராட்சசன், வேலைக்காரன், எல்.கே.ஜி, கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு பணிப்பெண் தோழியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினோதினி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டார். குறிப்பாக கடந்தாண்டு நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனையடுத்து இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை விமர்சித்து அடுத்த வீடியோவை வெளியிட்டார். இதுவும் இணையவாசிகள் இடையே வைரலானது.
மநீம ல் இணைந்தது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கடவுள் மற்றும் அஞ்ஞானவாதி (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) இடையே நடக்கும் கலந்துரையாடல் போல சித்தரித்து பதிவிட்டுள்ளார்.அதில் ஏன் தான் பாஜக மற்றும் திமுகவில் இணையவில்லை என்பதை மறைமுக குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் டூ அஞ்ஞானவாதி என்னும் அவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
NEWS EDITOR : RP