அமலாக்கத்துறை சோதனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மேலும் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக என தகவல் வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.
அமலாக்கத்துறை தாக்குதல்களை தலைமைச் செயலகத்தின் மீதே தொடுத்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவது தான் அரசியல் சட்ட மாண்பைக் காப்பதா.
NEWS EDITOR : RP