பொழுதுபோக்கு என்றதும், சட்டென நினைவுக்கு வருவது சினிமாதான். ஆரம்ப சினிமா, தற்போதைய சினிமா என்று என்னதான் விமர்சித்தாலும் சினிமா என்றாலே அலாதி பிரியம்தான். 3 மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படம், கவலைகளை மறக்க செய்வதுடன், புதிய அனுபவங்களையும், தெரியாத விஷயங்களையும் கற்றுத்தருகிறது.
இடிக்கப்படும் பழமையான தியேட்டர்கள் அந்த சினிமாவுக்கு சோதனைக்காலம் என்றால் அது கொரோனா காலம்தான். ஆம். கொரோனா காலகட்டத்தில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதில் பெரும்பாலான தியேட்டர்கள் கைமாற்றப்பட்டு, இடிக்கப்பட்டு, தற்போது குடியிருப்பு வளாகங்களாகவே முளைத்துவிட்டன. உதாரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் மோட்சம் தியேட்டர் பஸ் நிறுத்தம் இருக்கிறது. ஆனால் மோட்சம் தியேட்டர் எங்கு இருக்கிறது? என்றால், கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் மோட்சம் தியேட்டர் இடிக்கப்பட்டு, இப்போது வேறு மாதிரியான கட்டிடம் அங்கு நிறுவப்பட்டு இருக்கிறது.
இப்படி தொலைந்துபோன, தொலைக்கப்பட்ட, இடிந்து போன, இடிக்கப்பட்ட தியேட்டர்களில் விரைவில், இந்தியாவின் முதல் ‘பீச் டிரைவ் இன்’ தியேட்டரான ‘பிரார்த்தனா’ தியேட்டரும் இடம்பெற போகிறது என்பதே சோகமான உண்மை.
‘பிரார்த்தனா’ தியேட்டர் சென்னையின் மிக முக்கியமான பொழுதுபோக்கு பகுதி என்றால் அது கிழக்கு கடற்கரை சாலையான ஈ.சி.ஆர்.தான். வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதி களைகட்டும். இதை மனதில் கொண்டு மக்களுக்கான ஒரு பொழுது போக்கு தலத்தை உருவாக்க 1990-ம் ஆண்டு என்.தேவநாதன் என்பவர், ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம் அருகில் ஒரு ‘பீச் டிரைவ்-இன்’ தியேட்டரை கட்டினார். இந்தியாவின் முதல் ‘பீச் டிரைவ்-இன்’ தியேட்டராக இது கருதப்பட்டது.
மேலும், இந்த தியேட்டர் சென்னையின் மிக முக்கியமான அடையாளமாகவும் ‘பிரார்த்தனா’ தியேட்டர் கருதப்பட்டது. இந்த தியேட்டரின் விசேஷம் என்னவென்றால் வாகனங்களில் வருவோர், தங்கள் வாகனங்களில் இருந்தபடியே படத்தை பார்க்கலாம். இதற்காக அங்கு நீண்ட சுவர் கட்டி, உயரமான இடத்தில் ராட்சத திரை கட்டி அதில் படங்கள் திரையிடப்பட்டது. (‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த்-ஸ்ரேயா ஆகியோர் காரில் இருந்தபடியே படம் பார்ப்பார்களே… என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படித்தான்…) இந்த தியேட்டருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மறு ஆண்டே பல வசதிகளை தேவநாதன் அறிமுகப்படுத்தினார். பிரார்த்தனா தியேட்டரில் திறந்தவெளியில் படம் பார்ப்பது போல, அந்த வளாகத்திலேயே ஏ.சி. வசதி கொண்ட ‘ஆராதனா’ என்ற தியேட்டரையும் கட்டினார். வாகனங்களில் வருவோர் தவிர, பார்வையாளர்கள் படம் பார்க்கவும் 500 பேர் உட்காரும்படியான சிறிய கேலரி எழுப்பப்பட்டது.
இப்படி வசதிகள் செய்துதரப்பட்ட நிலையில், தியேட்டரின் புகழ் இன்னும் உயர்ந்தது. 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை காத்திருந்து மக்கள் டிக்கெட் வாங்கும் நிலைக்கு கூட்டம் வந்தது. குறிப்பிட்ட வரிசையில் காரை நிறுத்த போட்டா போட்டியே நடந்தது. தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டாலும், பெரும்பாலும் தமிழ் படங்களே ஒளிபரப்பானது. சில சமயங்களில் அதிரடி ஆங்கில படங்கள் திரையிடப்பட்டன. மேலும் பலர் காரை விட்டு இறங்கி பாய்-போர்வையில் படுத்துக்கொண்டும், நாற்காலியில் அமர்ந்துகொண்டு படம் பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா செல்வது போல போர்வை, தலையணையுடன் படம் பார்க்க வந்த காலமும் இந்த தியேட்டரால் நிகழ்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். நாளாக நாளாக அறுசுவையுடன் கூடிய உணவகம், குழந்தைகள் துள்ளி விளையாடி மகிழ பூங்காவும் கட்டப்பட்டது. இதன்மூலம் கார் இருக்கும் இடம் தேடி உணவு வந்தது. இதனால் விடுமுறை தினத்தில் இந்த தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு கூட வேகவேகமாக நடந்து முடிந்தன.
இப்படி சென்னையின் மிக முக்கிய பொழுதுபோக்கு தலமாக விளங்கிக்கொண்டிருந்த ‘பிரார்த்தனா’ தியேட்டருக்கும், அதன் தங்கை ‘ஆராதனா’வுக்கும் கொரோனா என்ற கொடிய அரக்கனால் சோதனை ஏற்பட்டது. இதனால் தியேட்டர்கள் களையிழந்தன. ஒரு காலத்தில் நிற்க இடமில்லாமல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்ட இந்த தியேட்டர், ஆள் அரவம் இன்றி வெறிச்சோடியது. ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டது. தூரத்து அலைகளின் சத்தத்தை மட்டுமே துணையாக கொண்ட கவலையுடன் மவுனத்துக்கு சென்றாள், ‘பிரார்த்தனா’. கொரோனா ஓய்ந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியிட்டாலும், இந்த தியேட்டர் திறக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், கட்டுப்பாடுகள் முழுவதும் விலக்கி கொள்ளப்பட்ட நிலையிலும் இந்த தியேட்டர் திறக்கப்படவே இல்லை. இறுகிய மனதுடன் உரிமையாளரும் முன்வரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தியேட்டர் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆட்கள் வருகைக்காக அல்ல, அளவெடுப்பார் வருகைக்காக… ஆம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த இந்த தியேட்டரை, ஒரு பெரிய நிறுவனத்துக்கு அதன் உரிமையாளர் விற்றுவிட்டார்.
அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது தற்போது அந்த தியேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அங்கு குடியிருப்பு கட்டிடமும், வணிக வளாகமும் கட்டப்பட இருக்கிறதாம். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது. தியேட்டர் இடிக்கப்படும் காட்சியை அந்த வழியாக செல்வோர் பார்த்துவிட்டு தவிப்போடு செல்வதையும் பார்க்க முடிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ”அப்போலாம் ‘பிரார்த்தனா’னாலே அப்படி ஒரு மவுசு இருந்துச்சுப்பா… ஜனம் அப்படி வரும். கூட்டம் கூட்டமா படம் பாக்க வரும். ஜகஜோதியா இருக்கும். இந்த தேட்டருக்கொசரம் ஈ.சி.ஆருல கடை போட்டவன் இருக்கான்பா… கொரோனா வந்துச்சு… தேட்டரு படுத்துருச்சுப்பா… சோக்கா இருந்த தேட்டர், இப்போ இடிச்சுட்டுருக்கானுங்க… மனசு கஷ்டமா இருக்குப்பா… ராசியான தேட்டரு… ஏன் ஓனரு இப்டி டிசிஷன் எடுத்தாருனு தெரிலப்பா…”, என்று சோகத்தை உதிர்க்கிறார்கள். இதுகுறித்து தியேட்டரின் முன்னாள் உரிமையாளர் தேவநாதன் குடும்பத்தினரை தொடர்புகொள்ளும்போது, கருத்து கூற மறுத்துவிட்டனர். சோகமா… என்னவென்று தெரியவில்லை. இப்போது இந்த தியேட்டரை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் நிறுவனம்தான், மாம்பலத்தில் இருந்து பழமையான சீனிவாசா தியேட்டரையும் வாங்கியிருக்கிறது. அந்த தியேட்டரில்தான் அஜித்குமார்-ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா ரசிகர்களின் வருத்தம் சென்னையில் பல தியேட்டர்கள் கொரோனா ஏற்படுத்திய நஷ்டத்தால் மூடப்பட்டு விட்டன. பலர், தியேட்டர்களை விற்றும் வருகிறார்கள். திரை பிரமுகர்களும், பெரிய பட தயாரிப்பு நிறுவனங்களுமே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தியேட்டர்களை கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்பு வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து தான் வருகிறோம். ஒரு பக்கம் பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் வணிக வளாகங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. எது எப்படி இருந்தாலும், தென்னிந்திய சினிமாவின் தலைநகரான சென்னையில் தியேட்டர்கள் இடிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம்தான். அதிலும் இந்தியாவின் முதல் ‘பீச் டிரைவ்-இன்’ தியேட்டர் இடிக்கப்படுவது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும், சென்னை மக்களுக்கும் வருத்தமான செய்தி.
NEWS EDITOR : RP