தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் (NEXT) தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட் (NEXT) தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். நமது மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
NEWS EDITOR : RP