எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் AI டெக்னாலஜி படித்துள்ள 14 வயது சிறுவனுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளதோடு, அச்சிறுவனுக்கு அந்நிறுவனத்தில் முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைரான் குவாசி. இவர் சிறு வயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருந்ததால் அவரது 11 வது வயதிலேயே அமெரிக்காவின் கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்ததோடு, அவரது திறமைக்காகவும், கல்வி சாதனைகளுக்காகவும் பல்கலைக்கழக நிர்வாகமே ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள உதவியதோடு, பல பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களை தாரளமாக அவருக்கு கொடுத்துள்ளது.
இதனை அடுத்து இன்டெல் லேப்சா AI ஆராய்ச்சி கூட்டுறவு உறுப்பினராக கைரான் பயிற்சி பெற்றதோடு, கடந்த 2022-ஆம் ஆண்டில், சைபர் நுண்ணறிவு நிறுவனமான பிளாக்பர்ட் நிறுவனத்தில் இயந்திர கற்றல் பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அசோசியேட் ஆப் சயின்ஸ் என்ற பட்டம் பெற்றுள்ள கைரான், AI டெக்னாலஜி குறித்த படிப்பையும் படித்து உள்ளதை அடுத்து தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினீயரிங் பிரிவில் அவருக்கு பணி கிடைத்துள்ளது.
இது குறித்து கைரான் குவாசி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரும் போது ” ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சேரவும், ஸ்டார்லிங்க் குழுவில் பணியாற்றவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் என்னுடைய வயதை
பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது எனக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. நான் எப்பொழுதும் விண்வெளியில் ஆர்வமாக இருக்கும் நபர். அந்த வகையில், மனிதகுலத்தை பல்கிரகமாக்குவதற்கு எனது முழு திறமைகளைப் பயன்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க் எனக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை கொடுத்துள்ளதோடு, கண்டிப்பாக இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நான் கடினமாக பாடுபடுவேன் ” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கைரான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் விண்வெளியை ஆராய்வதற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளார் என்பதோடு, மனித குலத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற அவர் பங்களிப்பார் என்ற நம்பிக்கை தாங்கள் கொண்டிருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 14 வயதிலேயே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ள சிறுவனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
NEWS EDITOR : RP