இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஜூன் மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருக்கு விருந்து அளிக்க உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்பயணத்தின் போது பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்ப உறவை வலுப்படுத்தல், பருவநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றுவது குறித்து இந்த சந்திப்பு அமையும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மோடியின் அமெரிக்க வருகையை ஒட்டி நியு ஜெர்சியில் உள்ள ஒரு உணவகத்தில் “மோடி ஜி தாலி “ எனும் பெயரில் புதிய உணவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த உணவகத்தை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஸ்ரீபாத் குல்கர்னி நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “மோடி ஜி தாலி “ உணவில் கிச்சடி, ரசகுல்லா, தேசிய கொடியின் வண்ணங்களில் உள்ள இட்லி , அப்பளம் உள்ளிட்ட பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. ஐநா இந்த வருடத்தை சிறுதாணிய ஆண்டாக அங்கீகரித்துள்ள நிலையில் மோடி ஜி தாலியில் இடம்பெற்றுள்ள உணவுகள் சிறுதானியத்தால் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP