ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்..!!

Spread the love

சென்னை சென்னை மெரினா காமராஜர் சாலைக்குட்பட்ட அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் திறந்து வைத்தார். மேலும் 15 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இலவச சீருடைகளையும் அவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த பஸ் முனையத்தில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு இடங்களுக்கு சுமார் 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பயணிகளுடன் 1,200 பயணங்களை இங்கிருந்து வழக்கமாக மேற்கொள்கின்றன.

இந்த பஸ் முனையம் முன்பு திறந்த மைதானமாக இருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறையின் சார்பில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 48 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலத்தில் பொதுமக்கள் கடும் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுவதை தடுக்கும் வகையில், இழுவைக் கூரையுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட பஸ் நிழற்கூரை, விளக்கு வசதி மற்றும் உணவளிக்கும் அறையுடன் தற்பொழுது அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே உள்ள பயன்படுத்தப்பட்ட சுமார் 220 சதுர அடி பரப்பளவு பஸ் நிழற்குடையை கடும் வெயிலில் பொதுமக்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில் குளிரூட்டப்பட்ட அறையாக மாற்ற ரூ.10.25 லட்சம் மதிப்பீட்டிலும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் நவீன கழிப்பறை ரூ.36.80 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram