சென்னை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்தார். ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி, பயிற்சி எடுத்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் மருத்துவ மாணவர் தனுஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சக மாணவரான ஆதித்யா என்பவர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தனுஷின் சாவுக்கான காரணம் தெரியவரும் என ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு தனுஷின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சக மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
NEWS EDITOR : RP