உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. புதுடெல்லி, வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, காகிதமில்லா பணபரிமாற்ற முறையை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. புதிய தீர்வுகளை கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தி, பணமில்லா பொருளாதாரம் நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.
இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், உலக அளவில் 2022-ம் ஆண்டில் டிஜிட்டல் வழி பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என பெருமையுடன் தெரிவித்து உள்ளது.
இதன்படி, டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா, 8.95 கோடி பேர் (46 சதவீதம்) என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் 2.92 கோடி பேருடன் பிரேசில் 2-வது இடமும், 1.76 கோடி பேருடன் சீனா 3-வது இடமும் பிடித்து உள்ளன. தொடர்ந்து, 1.65 கோடி பேருடன் தாய்லாந்து 4-வது இடமும், 80 லட்சம் பேருடன் தென்கொரியா 5-வது இடமும் பிடித்து உள்ளன என தெரிவித்து உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி கூறும்போது, டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மொபைல் வழியேயான தரவுகள் குறைந்த விலையில் கிடைக்க கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டின் ஊரக பொருளாதாரமும் உருமாற்றம் பெற்று வருகிறது என பேசினார்.
NEWS EDITOR : RP