திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கூவம், குமாரச்சேரி, பிள்ளையார்குப்பம், கொருக்கம்பேடு, பூவனூர், கல்லம்பேடு, கொட்டையூர், நரசமங்கலம் போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வந்தது. இதனால் சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அவர்கள் பேரம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவும் கல்லம்பேடு, நரசமங்கலம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் இரவு மக்கள் கடும் அவதியுற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மின் தடையை கண்டித்து கல்லம்பேடு, நரசமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென காரணி பஸ் நிலையம் அருகே மப்பேடு- சுங்கவாச்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக சாலையின் இரு புறங்களிலும் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
NEWS EDITOR : RP