கோடை மழை, சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்..!!

Spread the love

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால், விவசாயப் பெருமக்கள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியதாக செய்திகள் வருகின்றன. கடந்த 5-ஆம் தேதியன்று சூறைக் காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை, ஒதடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளகரை, கொடுக்கன்பாளையம், ராமாபுரம், அன்னவல்லி மற்றும் காரைக்காடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர்கள் முழுமையாக சேதமடைந்தும்; தேக்கு, பலா போன்ற மர வகைகளும் சேதமடைந்து விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட எருமனூர், ராசாபாளையம், தொட்டிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மற்றும் கரும்பு சாகுபடி செய்திருந்த நிலையில், திடீரென சூறாவளிக் காற்று வீசியதன் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மற்றும் பலா மரங்கள் போன்றவை சேதமடைந்ததால் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சூறைக் காற்றுடன் கூடிய கோடை மழையினால், தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில், சூறைக் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வந்த திமுக அரசின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெயரளவில் ஒரு இடத்தில் மட்டும் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது விவசாயிகள் சேதமடைந்த அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியபோது நடந்த வாக்குவாதத்தில், விரக்தியில் பேசிய ஒரு விவசாயியை அமைச்சர் மிரட்டிய நிகழ்வு, அப்பகுதி விவசாயிகளை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது.பெற்ற குழந்தைபோல் வளர்த்த பயிர்களை இழந்து வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர், விவசாயிகளை மிரட்டியது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கோடை மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டு சேதமடைந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளையும் மற்றும் பலா, தேக்கு போன்ற மர வகைகளையும்; அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram