சென்னையில் இருந்து கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்ட சொகுசு கப்பலான கார்டிலியா பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்ந்து 4 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னை துறைமுகம் வழியாக சொகுசு கப்பலில் பயணித்தனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், ஜூன் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து இலங்கைக்கு 5 விதமான சுற்றுலா திட்டங்களுடன் கார்டிலியா சொகுசு கப்பல் சேவை தொடங்கியுள்ளது. செப்டம்பர் வரை இயக்கப்பட உள்ள இந்த சொகுசு கப்பல், இலங்கையின் திரிகோணமலை, அம்பாந்தோட்டை, யாழ்பாணம் சென்று மீண்டும் சென்னை திரும்பும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது.
நட்சத்திர விடுதி போல் 11 மாடிகளுடன் இந்த கப்பல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1,600 பேர் வரை பயணிக்கக் கூடிய வகையிலும், பயணிகள் இருக்கும் அறைகளிலிருந்தே கடல் அழகை ரசிக்கும் வகையிலும், மாளிகைபோல் இக்கப்பல் காட்சியளிக்கிறது.
கார்டிலியா கப்பலில், விளையாட்டு அரங்கம் உள்பட நிறைய வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு சுற்றுலாப்பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ, கப்பலின் மேற்பகுதியில் நீச்சல்குளமும் உள்ளது. சைவம், அசைவம் என உணவு பிரியர்கள் உண்டு மகிழ விதவிதமான உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. சொகுசாக சென்னையிலிருந்து இலங்கை செல்ல இந்த சொகுசு கப்பலில் 4 நாட்களுக்கு ரூ 85,000 முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
NEWS EDITOR : RP