திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45). இவர் நேற்று (05.06.2023) காலை 5 மணியளவில் மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்ட நிலையில் ரத்தம் வழிவது நிற்கவில்லை.
தலையில் கடுமையான வலி இருந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்ததில் கார்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு ‘நட்டு’ ஒன்று இருப்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை அகற்றியுள்ளனர். தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாப்பாத்தியிடம் கேட்டதற்கு, ‘‘இது குறித்து இன்று மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து விரிவான விசாரணைக்கு பிறகு உண்மைத் தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
NEWS EDITOR : RP