கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி..!!

Spread the love

கோவை மாநகரில் அரசு பேருந்தின் எண்ணிக்கைக்கு சமமாக பல தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் தினமும் பயணிக்கும் பயணிகள் சரியான சில்லறையை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் பயணசீட்டுக்கு சரியான சில்லரை கொடுப்பது பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் பிரச்னையாகவே இருந்து வருகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கோவையில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம், வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த 5 பேருந்துகளிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துநரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம். இந்த திட்டமானது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

இதுகுறித்து தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் கூறியதாவது, ”பேருந்துகளில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பேருந்துகளிலும் அறிமுகப்படுத்துவது குறித்து யோசித்து வந்தோம்.

ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் கியூஆர் கோர்டை தயார் செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பேருந்துகளிலும் ஒட்டினோம். இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பேருந்தில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கென ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை குறைந்துள்ளது.“ என தெரிவித்தனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram