திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கடந்த 17ஆம் தேதி காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கா்ப்பிணி பெண்கள் குறித்த தகவலை ஆட்சியா் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் அடுத்த 30 நாள்களில் பிரசவிக்கக்கூடிய 696 கா்ப்பிணிகளை நேரடியாக தொடா்பு கொண்டு அவா்கள் அனைவரையும் மருத்துவமனையில் சேர அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கா்ப்பிணிகள் 142 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் 91 பேருக்கு கடந்த இரண்டு நாட்களில் குழந்தை பிறந்துள்ளதாக ஆட்சியா் காா்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.
முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 142 நிறைமாத கா்ப்பிணிகளில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 36 கா்ப்பிணிகளில் 14 பேருக்கும், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 23 பேரில் 13 பேருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 37 பேரில் 21 பேருக்கும் குழந்தை பிறந்துள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 56 பேரில் 43 பேருக்கும் குழந்தை பிறந்துள்ளது.
NEWS EDITOR : RP