கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் 36 வார கர்ப்பத்துடன் எந்த ஒரு அசைவும் இன்றி இருதய செயலிழப்புடன், கர்ப்ப கால வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகளுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 9ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உயிர்காக்கும் முதலுதவி செய்து சேர்க்கை சுவாசம் அளித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் பத்திரமாக குழந்தை பிறந்தது.தொடர்ந்து செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் 35 நாட்களுக்கு அந்தப் பெண்ணிற்கு சேர்க்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் தொடர் முயற்சியால் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கை கால்களில் அசைவு ஏற்பட்டு படிப்படியாக இயற்கையாக சுவாசிக்க துவங்கினார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின் அந்தப் பெண் பூரண நலம் பெற்று நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இருதய செயலிழப்பு மற்றும் பல்வேறு நோய்களுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையிலான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், இஎன்டி மருத்துவர்கள், இருதய மருத்துவர்கள் என பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கூட்டு முயற்சியில் தீவிர கண்காணிப்புடன் உயர்ரக சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.அதே போல், கடந்த 1ம் தேதி சோனியா என்ற பெண் பிரசவத்திற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 ஆம் தேதி அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
NEWS EDITOR : RP