உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்த 2022-ம் ஆண்டு கோடைக் காலத்தில் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த நிறுவனம் செய்த ஆய்வின் முடிவில், கோடை காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக ஜூலை 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு ஐரோப்பா யூனியனில் ஏற்பட்ட வெப்பத்தால் 70,000 பேர் பலியானதை தொடர்ந்து, கோடை காலங்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கடந்தாண்டு 61,000 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் உலகம் முழுவதும் வெப்பம் தாங்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டை பொறுத்தவரை ஏற்கெனவே ஜூலை முதல் வாரம், உலகின் அதிக வெப்பம் பதிவான வாரமாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் இருக்கும் வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று பரிசோதிப்பது, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைப்பது, பொது இடங்களில் குளிர்பானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள் எனவும், இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
NEWS EDITOR : RP