சென்னை, சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு சென்று உள்ளனர்.
கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை இலசமாக கேட்டு, தகராறில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், கடை உரிமையாளரின் புகாரின் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜூஸ் கடையில் நான்கு காவலர்களும் பொருட்கள் கேட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தவிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP