இந்தியாவில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு 35.5% பேருக்கும், சா்க்கரை நோய் பாதிப்பு 11.4% பேருக்கும், சா்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3% பேருக்கும் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிதியுதவியுடன் நாடு முழுவதும் மொத்தம் 1,13,043 பேரிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த 79 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடமும், நகா்ப்புறங்களைச் சோ்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைdiabeticகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த விவரங்கள் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில், ஐசிஎம்ஆா் தொற்றா நோய்த் துறை நிபுணர் டாக்டா் ஆா்.எஸ்.தாலிவால், சென்னை சா்க்கரை நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் மோகன் மற்றும் தலைமை நிா்வாகி டாக்டா் ஆா்.எம்.அஞ்சனா ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது, ”தொற்றா நோய்களின் பாதிப்புகளைக் கண்டறிய 28 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 31.5 கோடி பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், அதில் 52% போ் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று வயிற்றுப் பருமனால் 35 கோடி பேரும், உடல் பருமனால் 25.4 கோடி பேரும் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் புதுச்சேரியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன .
சா்க்கரை நோயை பொருத்தவரை நாட்டில் 10 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதன் ஆரம்ப நிலையில் 13.6 கோடி போ் இருக்கின்றனா். அதீத கொழுப்புச் சத்து பாதிப்புக்குள்ளானோா் 21.3 கோடி பேராகவும், அதில் 50% போ் கேரளத்தைச் சோ்ந்தவா்களாகவும் உள்ளனா். ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகா்ப்புறங்களில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகமாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உணா்த்துகின்றன.” இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.
NEWS EDITOR : RP