கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவி காணப்படுகிறது. இந்த தொற்றுடன் தொடர்புடைய சுவாச பாதிப்புகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்துள்ளது. அதன்படி, 3 மாத பெண் குழந்தை மற்றும், 8 மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதில், 3 மாத பெண் குழந்தை தொடர் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக கூறப்படுகிறது.
அக்குழந்தை விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது. இதேபோன்று, 8 மாத ஆண் குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது. இந்த 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.