கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). அங்குள்ள உழவர் சந்தை சாலையில், சிறிய கடையில் முட்டை வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ராஜா நடராஜனுக்கு, சென்னை வணிக வரித் துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, ராஜா நடராஜனின் மனைவி கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. மனுவின்நிலையை அறிய இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, ‘குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்து, தொழில் மற்றும் சேவை வரி கட்டும் தொழில் நிறுவன உரிமையாளர் உள்ளார். எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
இதனால் குழப்பமடைந்த ராஜா நடராஜன், தனக்கு வணிக வரித் துறை அனுப்பிய நோட்டீஸை, ஆங்கிலம் தெரிந்த நபரிடம் கொடுத்து விவரம் கேட்டபோது, ‘சென்னை எக்மோர் பகுதியில் மகாதேவ் என்டர்பிரைசஸ் என்றநிறுவனம் செயல்பட்டு வருகிறது.அந்த நிறுவனத்தின் உரிமையாளரான நீங்கள், உங்கள் நிறுவனத்தில் 2023 பிப்ரவரியில் ரூ.6,902கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளீர்கள். எனவே, ரூ.1,932 கோடி ஜிஎஸ்டிகட்ட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP