திருப்பூரில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 17 பவுன்நகையை கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி ஜூவிதா. இவா்கள் இருவரும் தேனியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்வழி செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர். இரவு நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஜூவிதா தனது கைப்பையில் 17 பவுன்நகையை வைத்திருந்ததார். திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே வந்தது. அப்போது ஜூவிதா தனது கைப்பையை பார்த்தார். அப்போது கைப்பை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கைப்பையின் உள்ளே பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகை காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக ஜூவிதா சத்தம் போடவும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கூட்டத்தை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்த ஆசாமிகள் ஜூவிதா கைப்பையை திறந்து அதில் வைத்திருந்த 17 பவுன்நகையை அபேஸ் செய்திருந்தது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் சிக்காமல் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் ஜூவிதா தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மா்ம ஆசாமிகள் 17 பவுன் நகையை திருடி இருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP