ஒரு நாட்டில் மூன்றே வருடத்தில் 13லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? அதிலும் குறிப்பாக 18 வயதிற்கும் குறைவான இரண்டரை லட்சம் சிறுமிகள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி சற்று அதிர்ச்சிகரமாகவே உள்ளது.
இந்த சம்பவம் நடந்தது வேறொரு நாட்டில் அல்ல இந்தியாவில்தான். போர் மற்றும் தேசிய பேரிடர் போன்ற அசாதாரண நிகழ்வுகளின் போதுதான் பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது போன்ற அசாதாரண நிகழ்வுகள் எதுவுமே நடைபெறாமல் 13 லட்சம் பெண்கள் மாயமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 26-ம் தேதி காணாமல் போன பெண்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் அளித்த பதிலில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 18வயதை கடந்த பெண்கள் 10,61,648 பேரும் , 18 வயதிற்கும் குறைவான சிறுமிகள் 2,51,430 பேரும் காணாமல் போயுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 82,084 மற்றும் 3,42,168 ஆகும். இதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டில், 79, 233 சிறுமிகளும், 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்தார்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி பெண்கள் அதிகம் காணமல் போன மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 2019 முதல் 2021 வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் காணமல் போன யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. தேசிய தலைநகரமான 2019 மற்றும் 2021 க்கு இடையில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். அதேபோல ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. 2019-21 காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். இதேபோல மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் இந்த காலகட்டத்தில் காணாமல் போயுள்ளனர்.
ஒடிசாவில் இதே காலகட்டத்தில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
NEWS EDITOR : RP