பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
இந்நிலையில் வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர்கள் அளித்த பேட்டியில்,வருகின்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
வினேஷ் போகத்தின் நெருங்கிய உறவினரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா குமாரி போகத், கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பபிதா குமாரி போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அவருக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்குவார் என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.