இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியது.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையின்போது, தான் என்ஏபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கழிவறையை பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.
மேலும், மெதுவான மாரடைப்பை தூண்டும் வகையில் ஊசி போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இம்ரான் கான் தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட இஸ்லாமாபாத் நீதிமன்றம் வழக்கை வரும் மே 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அலுவலகங்களில் என்ஏபி அதிகாரிகள், போலீஸார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கான் கைது தொடர்பாக ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றசமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க மொபைல் இணைய சேவைகளை ரத்து செய்ய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பள்ளிகளை மூடவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க கூடுதல் ராணுவப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானில் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அரசியல் சிக்கலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்றே நாம் விரும்ப வேண்டும். இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன். பாகிஸ்தான் உருவானதில் இருந்து பல்வேறு மோசமான அரசியல்சூழல்களை எதிா்கொண்டுள்ளது.
நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் என்பது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து. வலிமையான, ஜனநாயகமான பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகம் வளர்ந்தால் அது இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மோசமாக உள்ளது.” என்றார்.