தனியார் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து விமர்சித்தார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று கூறினார்.
தமிழ்நாடு காவல்துறையின் சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், தமிழ்நாடு காவல்துறை நன்கு பயிற்சி பெற்ற, திறமையான காவலர்களைக் கொண்டது என்றும், அது தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
மேலும், “சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியல் ஆகும்” என்று தெரிவித்தார்.
பல்வேறு தரப்பினருடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துவதால் ராஜ்பவன் தேநீர் கடையாக மாறி வருகிறது என விமர்சகர்கள் கூறுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ”ஆளுநர் என்பவர் ராஜா அல்ல. ராஜ்பவன் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். அது மக்களுக்கான இடம். ’ராஜ்பவன்’ என்ற பெயரை ’லோக் பவன்’ ஆக மாற்ற வேண்டும் என நான் யோசித்து வருகிறேன். மாநில மக்களின் நலனுக்கான சக்தியாக ஆளுநர் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் நான் அவ்வப்போது பல்வேறு தரப்பினரை ராஜ்பவனில் சந்திக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை விவரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசியலமைப்பு அனைவருக்குமானது. அதை மீற முயன்றால் கட்டுப்படுத்துவது ஆளுநரின் கடமை. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது, அரசின் கொள்கைகளோ அல்லது நலத்திட்டங்களோ இல்லை. அவை எல்லாம் பொய் பிரச்சாரங்களாகவே இருந்தன. நெருக்கடி கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியதால் பேரவையில் இருந்து வெளியேறினேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் மாளிகை செலவினங்கள் குறித்து நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தன்னுடைய நட்புறவு குறித்து பேசிய ஆளுநர் ரவி, “மு.க.ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர். நான் அவரிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறேன். அதேபோல் அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார். தனிப்பட்ட முறையில், எங்களுக்கு இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது” என்று கூறினார்.
தமிழ்நாட்டு மக்களுடனான உறவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ் மக்கள் மிகவும் பண்பட்டவர்கள். ஆழ்ந்த ஆன்மீக உணர்வும், விருந்தோம்பல் பண்பும் கொண்டவர்கள். தமிழ் இலக்கியச் சிந்தனையின் ஆழமும், இலக்கியச் செழுமையும் என்னை வியக்க வைத்தது. தமிழ்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக உணர்கிறேன். இங்குள்ள மக்களுக்கும், அரசியலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் தெரிகிறது. தமிழ்நாட்டு அரசியலில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் அவற்றை பெற முடியும்” என்றார்.