தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜவிற்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை செய்து வைத்தார். இதன்படி புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார்
இதன் பின்னர் புதிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட இலாக்காக்கள் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
● தங்கம் தென்னரசு – நிதி, மனிதவள மேம்பாடு அமைச்சர்
● டி.ஆர்.பி.ராஜா – தொழில்துறை அமைச்சர்
● மு.பெ.சாமிநாதன் – தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
● பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர்
● மனோ தங்கராஜ் – பால்வளத்துறை அமைச்சர்