பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவுற்றுள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-இந்தியாவின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டுடன் மோதல் வெடித்தபோது நாடு தைரியத்தை காட்டியது.மோடி ஆட்சி காலத்தில் எல்லை உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருந்தது
அவர்கள் (காங்கிரசார்) மோடி மீதான வெறுப்புக்கு வெளியே வர வேண்டும். காங்கிரஸ் கட்சி மிக மோசமாக கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது.கொரோனா தொற்று மோசமாக நிர்வகிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது. இந்தியா அந்த தொற்றை நிர்வகித்த விதத்தை ஒட்டுமொத்த உலகமே அங்கீகரித்துள்ளது.ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டன. காங்கிரஸ் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.80 லட்சம் கோடி). பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது அது 3½ டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.280 லட்சம் கோடி). நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.50 லட்சம் கோடிக்கும் அதிகம்.சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதம். உற்பத்தி துறையில் இந்தியா 99 சதவீத செல்போன் தேவையை சந்திக்கிறது. 2014-ம் ஆண்டு இதில் 78 சதவீதம் இறக்குமதிதான் செய்யப்பட்டது.விவசாய உற்பத்தி பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடி ஆகும். 312 திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு ரூ.6.68 லட்சம் கோடி வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களுக்கு போகிற ரூ.2.70 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி உள்ள கேள்விகள், பொய் மூட்டை ஏமாற்ற மலை. 9 கேள்விகளும் விமர்சனத்தின் அடிப்படையில் எழவில்லை. அவை மோடி மீதான நோய் இயல் வெறுப்பினால் எழுந்தவை.