கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 9 மணி நிலவரம்: காலை 9 மணி வரை நிலவரப்படி காங்கிரஸ் 101 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, தேர்தல் முடிவுகள் குறித்த முன்னணி நிலவரங்கள் உள்ளன. பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில், பாஜகவைவிட காங்கிரஸ் சற்று முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.