கடந்த சில மாதங்களாக ஹர்திக் பாண்ட்யாவின் விளையாட்டு வியக்கும் வகையில் இருக்கிறது
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி குறித்து ஷேன் வாட்சன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலி தொடர்ந்து ரன்களை குவித்து வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். நான் உணர்ந்த வகையில் விராட் கோலி அவரது கெரியரிலேயே இப்போதுதான் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அவரால் 100 சதங்களை அடிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் பாராட்டு வகையில் இருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருப்பார்.
ஏனென்றால் அவர் ஒரு ஆல்ரவுண்டர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அவர் நுட்பமான விஷயங்களை அறிந்து வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஹர்திக் பாண்ட்யாவின் விளையாட்டு வியக்கும் வகையில் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளார். நிச்சயமாக அவர் மதிப்பு மிக்க வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் கவனம் பெறும் வீரராக இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி கடந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. தான் அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.