தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜவிற்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை செய்து வைத்தார். இதன்படி புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார்.