👑 பிரிட்டன் மன்னராக சார்லஸுக்கு நாளை முடிசூட்டு விழா

Spread the love

கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்  இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா உடனடியாக நடைபெறவில்லை. ராணிக்கு துக்கம் அனுசரித்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு முடிசூட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா பிரிட்டனில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

ராணி எலிசபெத் பிப்ரவரி 6, 1952 ல் இங்கிலாந்து ராணியாக பதவியேற்ற பிறகு, அவரது முடிசூட்டு விழா ஒரு ஆண்டு கழித்து ஜூன் 2, 1953 அன்று நடந்தது. அதன் பின்னர் 70 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு முடிசூட்டு விழாவிற்கு பிரிட்டன் தயாராகியுள்ளது.  இந்த பதவியேற்பு விழா லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நகரில் அபே தேவாலயத்தில் நடக்கவுள்ளது.

வெகு விமரிசையாக நாளை நடக்கவிருக்கும் இந்த முடிசூட்டு விழாவில் 2,000-க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்த 850 பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த 850 தன்னார்வலர்களும் பிரிட்டிஷ் அரசின் பதக்கம் வென்றவர்கள். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹியும் ஒருவர். இவர் கொரோனா காலத்தில் சிறப்பான சேவையாற்றியதற்காகப் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடமிருந்து பிரிட்டிஷ் பேரரசின் பதக்கம் வென்றார்.

காலையில், மன்னர் மூன்றாம் சார்லஸும், அவரின் மனைவி ராணி கமிலாவும், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அபே தேவாலயத்துக்கு, தங்கமுலாம் பூசப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள் 700 ஆண்டுகளாக பயன்படுத்திய தங்கமுலாம் பூசப்பட்ட அரியாசனம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிம்மாசனத்தில், பிரிட்டன் ராஜவம்சத்துக்குச் சொந்தமான செங்கோலை ஏந்தியபடி மன்னர் சார்லஸ் அமர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னர் சார்லஸுக்கு புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்படுமென பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டன் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் பாரம்பரியமாக இந்த கிரீடம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிரிட்டனின் மன்னராகவிருக்கும் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் காண இங்கிலாந்து மக்கள் பலரும் ஆர்வம் காட்டினாலும், ஒரு பகுதி மக்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். அரசாங்கத்தின் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும் குடியரசாகப் பிரிட்டன் மாற வேண்டும் என்பதுடன் ”நாட் மை கிங்” என்ற பதாகைகள் ஏந்தி சார்லஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram