மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன.
இதனிடையே வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.
இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடன் சந்திப்பை நடத்தினார். இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மேலும், இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்புகளை அகற்றினால் தான் காய்கறிகள், மருந்துகள், பெட்ரோல், டீசல் மக்களுக்கு சென்றடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்தால் தான் மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP