ஒடிசா ரெயில் விபத்து: மகன் இறந்த செய்தியை நம்பாமல் 230 கிமீ தூரம் ஓடி வந்த தந்தை:

Spread the love

புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதேநேரம் காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். எனவே காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஹவுராவில் கடை வைத்திருக்கும் பிஸ்வஜித்தின் தந்தை ஹெலராம் மாலிக், வெள்ளிக்கிழமை ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் தனது மகனை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது சிறிதே நேரமே பேசிய பிஸ்வஜித் பலவீனமாக பதில் அளித்துள்ளார். அதை வைத்து தன் மகன் விபத்தில் காயமுற்றாலும் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டிருக்கிறார் ஹெலாம்.

இதனால், உடனே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் அன்று இரவே பாலசோருக்குப் புறப்பட்டார். 230 கிமீ தூரம் பயணித்து அங்கு சென்றபின், எந்த மருத்துவமனையிலும் பிஸ்வஜித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், பஹானாகா உயர்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சவக்கிடங்கிற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான உடல்கள் மத்தியில் தன் மகன் பிஸ்வஜித் மயக்கம் அடைந்த் நிலையில் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார். அங்கு மகன் உயிருடன் இருப்பதை கண்டு அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக பிஸ்வஜித் ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சில ஊசிகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை மேல் சிகிச்சைக்காக கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவரகள் பரிந்துரைத்தனர், ஆனால் ஹெலராம் மகனை டிஸ்சார்ஜ் செய்து கொல்கத்தாவில் சிகிச்சையைத் தொடர முடிவு செய்தார். கொல்கத்தாவிற்கு காரில் செல்லும் நேரம் முழுவதும் பிஸ்வஜித் சுயநினைவின்றியே இருந்தார். ஞாயிறு காலை 8.30 மணிக்கு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட அவருக்கு, கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மற்றொரு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரது வலது கையில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. பிஸ்வஜித் சஸ்பெண்டட் அனிமேஷன் என்ற நிலையில் உள்ளார் என டாக்டர் சோம்நாத் தாஸ் கூறுகிறார். ஏதேனும் அதிர்ச்சியால் இந்த நிலை ஏற்படும் என்றும் அப்போது உயிரியல் செயல்பாடுகளின் தற்காலிக மந்தநிலையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். முதலில் பிஸ்வஜித் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள டாக்டர் சோம்நாத், “காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த அவசரச் சூழ்நிலையில், உடல்களை கூர்ந்து கவனிக்க நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம்” என்று சொல்கிறார். மேலும், மீட்புப் பணிகள் ஈடுபட்டவர்கள் டாக்டர்கள் இல்லை என்பதால், விபத்து நடந்த இடத்தில் காயமடைந்து கிடப்பவர் சுயநினைவின்றி, பதிலளிக்காமல் இருக்கும்போது இறந்துவிட்டதாக தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram