நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து குட்டிகளுடன் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட நீலகிரி வனப்பகுதிக்கு வர துவங்கியுள்ளது.
அவ்வாறு வரும் காட்டு யானைகள் சாலைகளை கடந்து செல்வதும், சாலை ஓரங்களில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனிடையே முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாயார் சாலையில் குட்டியுடன் யானைகள் சாலை கடக்கும் போது அவ்வழியாக வாகனம் ஒன்று வந்தது. அப்போது அந்த வாகன ஓட்டி சாலையில் நின்றுக் கொண்டிருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல தொடர்ந்து ஹாரன் அடித்தப்படியே இருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த தாய் யானை ஹாரன் எழுப்பிய வாகனத்தை நீண்ட தூரம் விரட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வாகனத்தில் வந்த ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கி காட்டு யானைகளிடமிருந்து தப்பித்தார். இந்த காட்சியை அந்த வாகனத்தில் வந்த மற்றொருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
NEWS EDITOR : RP