நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் போது தேமுதிக அலுவலகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.