சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை தொண்டர்களின் இல்ல விழாவாக – மக்கள் விழாவாக – கொள்கை விழாவாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு;
கருணாநிதி நூற்றாண்டு விழா ”தமிழின தலைவர் கலைஞர் அவர்களை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில்-சூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
நாடே திரும்பிப் பார்க்கணும்
”தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் சூன் 3 – ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் – 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக – மக்கள் விழாவாக – கொள்கை விழாவாக – வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.”
நல்வாய்ப்பு
”திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும் – கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.”
பிரம்மாண்டம்
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை ஓராண்டு முழுவதும் நான் ஸ்டாப் கொண்டாட்டமாக கருணாநிதி நூற்றாண்டு விழா களைகட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.