அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்த நகரிலுள்ள ஓட்டல்களின் பெரும்பாலான அறைகள் அந்த தேதிகளில் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.
இந்நிலையில் போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு விமானக் கட்டணம் (சென்று வருவதற்கு) வழக்கமாக ரூ.10 ஆயிரம் அளவுக்கு இருக்கும். ஆனால், அக்டோபரில் அகமதாபாத்துக்குச் செல்ல விமான கட்டணமாக ரூ.45,425 செலுத்த வேண்டியுள்ளது. இது 3 மடங்குக்கும் அதிகமாகும்.
இதுகுறித்து இந்தியா டிராவல் ஏஜெண்டுகள் சங்கத்தின் தலைவர் வீரேந்திர ஷா கூறும்போது, “அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்போட்டி நடைபெறும் 15-ம் தேதிக்கு முன்னதாகவும், பின்னதாகவும் டிக்கெட் கட்டணம் அதிக அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் அதிக அளவுக்கு மக்கள் டிக்கெட் புக்கிங் செய்வதால் இந்த நிலை உள்ளது. தொடக்க, இறுதி ஆட்டத்தை விட இந்தியா, பாகிஸ்தான் போட்டியைக் காணவே ரசிகர்கள் விரும்புகின்றனர்” என்றார்.
அக்டோபர் 14 முதல் 16 வரை இந்த டிக்கெட் கட்டண உயர்வு உள்ளது. வழக்கமாக சில மாதங்களுக்கு முன்னரே விமான டிக்கெட் பதிவு செய்தால் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள தேதியையொட்டி அகமதாபாத் செல்ல இப்போது டிக்கெட் பதிவு செய்தாலும் கட்டணம் ரூ.45 ஆயிரம் என்றே உள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மும்பை, டெல்லி நகரங்களுக்கும் டிக்கெட் கட்டணங்கள் அன்றைய தினங்களில் சுமார் 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளன.
NEWS EDITOR : RP