ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் பாகிஸ்தானில் நடத்துவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது. ஆனால் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதற்கெல்லாம் அசரவில்லை.
பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்ததாக அறிவித்தது. அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நரகத்திற்கு போகட்டும் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
ஜாவேத் மியாண்டட் இவ்வாறு பேசுவது இது முதன்முறையல்ல. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருந்த தருணத்தில் பாகிஸ்தான் அரசு அணு ஆயுதங்களை சும்மா வைத்திருக்கவில்லை, இந்தியாவுக்காகத்தான் வைத்திருக்கிறது என்று பேசி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP