மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா… இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம.
நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” மற்றும் ஆர்.ஜெ பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சங்கீதா. இவர் பல சீரியல்களிலும் நடித்து பிரபல சின்னத்திரை நடிகையாகவும் வலம் வருகிறார். சென்னை கேகே நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சங்கீதா வசித்து வருகிறார். ஜூன் 9 ஆம் தேதி நடிகை சங்கீதா தனது வீட்டின் வெளியே விட்டிருந்த செருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார்.
அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், பூட்டியிருந்த நடிகை சங்கீதாவின் வீட்டை நோட்டமிட்டு பின் வெளியில் விடப்பட்டிருந்த அவரது செருப்பை லிஃப்டுக்குள் தள்ளிவிட்டு லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது.
சிசிடிவி ஆதாரங்களுடன் நடிகை சங்கீதா திருட்டுச் சம்பவம் தொடர்பாக கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் அந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். எதையோ தேடி வந்தவர்கள் அது கிடைக்காமல் செருப்பை திருடிச் சென்றுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ள அவர், வயதான தாய் மற்றும் குழந்தையுடன் தனியாக வசிப்பதால் பாதுகாப்பு கருதி தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP